×

ஆன்மிகம் பிட்ஸ்: உச்சிப்பிள்ளையாரும் கற்பக விநாயகரும்

உச்சிப்பிள்ளையாரும் கற்பக விநாயகரும்

தில்லை ஆகாயத் தலமாக இருப்பதாக, விநாயகப் பெருமானும் ஆகாச விநாயகராக உச்சிப்பிள்ளையார் என்னும் பெயருடன் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். மேற்கு உள்வாயிலுக்கு நேராக திருமுறைகாட்டிய விநாயகரும் அவருக்கு நேர் மேலே உச்சிப்பிள்ளையாரும் உள்ளனர். தில்லையில் ராஜாக்கள் தம்பிரான் திருமாளிகைப் பிராகாரம் என்று வரலாற்றில் குறிக்கப்படும் பெரிய பிராகாரத்தில் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள பெரிய சந்நதியில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையாருக்கு `குலோத்துங்க சோழப் பிள்ளையார்’ என்பது பெயர்.

இந்த நாளில் இவர் முகக்கட்டண விநாயகர் என்றழைக்கப்படுகின்றனர். ராஜாக்கள் தம்பிரான் என்பது குலோத்துங்கச் சோழனின் பட்டப் பெயராகும். அவன் பெயரால் பெரிய பிராகாரமும், இதிலுள்ள பெரிய விநாயகரும் அழைக்கப்பட்டனர். சிற்சபையைச் சுற்றியுள்ள திருமாளிகையில் எழுந்தருளியுள்ள க்ஷேத்திர விநாயகரான கூத்தாடும் விநாயகருக்குக் கற்பக விநாயகர் என்பது பெயர்.

இடுகுஞ்சி கணபதி

கர்நாடக மாநிலத்தில் உள்ள வளமான அழகான ஊர் இடுகுஞ்சி. அகிலம் அனைத்தையும் காத்து ரட்சிக்கும் சிவ-பார்வதியின் திருமகன் விநாயகர், இத்தலத்தில் நின்ற கோலத்தில் வலக்கையில் பாசமும், இடக்கையில் மோதகமும் ஏந்தியுள்ளார். ‘‘நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் இவர் இங்கே இரண்டு தந்தங்களும் முழுமையாக உள்ளது’’ என்பதே இத்தலத்தின் சிறப்பு. பாக்குமர பூவினாலேயே பிரமாதமாக அலங்காரம் செய்வது மற்றோர் தனிச்சிறப்பாகும்.

வெண்ணிற விநாயகர்

பெங்களூரு, ஏர்போர்ட் சாலையில் உள்ள சிவாலயத்தில் எழுந்தருளியிருக்கிறார் வெண்ணிற விநாயகர். திருக்கரங்களில் பாசம், அங்குசம், தந்தம் மற்றும் மோதகத்துடன் திகழும் இந்த விநாயகர் செயற்கைக் குகையில் அருள்பாலிப்பது சிறப்பு. இந்த சிவாலயத்தில் 12 ஜோதிர்லிங்கங்களையும் தரிசிக்கலாம்.

தோரண கணபதி

தோரணம் என்பதற்கு அலங்கரிக்கப்பட்ட முகப்பு வாயில் என்பது பெயர். இந்த வாயில் மீது பெரிய மகரங்களின் வடிவங்கள் பூவேலைப் பாடுகளுடன் அமைப்பர். இதற்கு மகரங்கள் வருணனின் வாகனங்கள். அவை செல்வச் செழிப்பைக் குறிப்பனவாகும். மகரங்களுக்கு நடுவே விநாயகரை அமைத்துள்ளனர். இவருக்குத் தோரண கணபதி என்பது பெயர். பின்னாளில் தோரணத்தின் மையத்தில் அமைக்காமல் அதன் முன்பாக சிறிய ஆலயத்தில் விநாயகரை அமைக்கும் வழக்கம் வந்துவிட்டது. இவரையும் தோரண கணபதி என்றே அழைக்கின்றனர்.

தோரண கணபதி தாம் வீற்றிருக்கும் மாளிகையின் கோயிலில் செல்வச் செழிப்பை உண்டாக்குவதுடன், அங்கு மகிழ்ச்சியும் இன்பமும் நிலவும் படி செய்கிறார். காலப்போக்கில் வாயிலில் மகர தோரணங்கள் அமைக்கும் வழக்கம் இலலாது போய்விட்டதால், தோரண கணபதியைக் காண முடியவில்லை. கர்நாடகத்துக் கோயில்கள் பலவற்றில் தோரண கணபதி வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

முக்குறுணி விநாயகர்

குறுணி என்பது நெல் முதலிய தானியங்களை அளக்கும் அளவைகளில் ஒன்றான மரக்காலின் மும்மடங்கு ஆகும். முக்குறுணி என்பது ஒன்பது மரக்கால் அளவையைக் குறிக்கும். இங்கு முக்குறுணி விநாயகர் என்பது அளவால் பெரிய விநாயகரைக் குறிக்கிறது. மதுரை, திருவக்கரை, காஞ்சிபுரம், சிதம்பரம் முதலிய தலங்களில் அளவால் பெரிய விநாயகரைக் காண்கிறோம். இவர்கள் ஏறத்தாழ 8 அடி உயரம் உடையவர்கள். இவர்களுக்குப் பக்கவாட்டிலுள்ள படிகளில் ஏறியே அபிஷேகம் செய்ய வேண்டும்.

இவர்களின் உருவத்திற்கு ஏற்ப மோதகம் படைக்க வேண்டும் என்பதற்காக முக்குறுணி அரிசியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மோதகத்தை (கொழுக்கட்டையை) படைக்கின்றனர். மதுரை முக்குறுணி விநாயகர் உலகப் புகழ் பெற்ற விநாயகராவார். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் தெற்குக் கோபுரவாயில் இருந்து வருபவர்களுக்கு நேர் இருந்து அருள்பாலிக்கிறார். மீனாட்சியின் முன் மகாமண்டபத்தில் இருந்து மீனாட்சி அம்மனையும் இந்தப் பிள்ளையாரையும் ஒருசேரத் தரிசிக்கலாம்.

கம்போடியாவில் விநாயகர்

கம்போடிய நாட்டில் விநாயகரை ‘ப்ராஹ் கணேஷ்’ என அழைக்கின்றனர். இங்குள்ள சோக்குங் (சந்தனமலை) என்ற இடத்தில் சந்தன பிள்ளையார் கோயில் இருக்கிறது. ஒரு தந்தத்தை கையில் ஏந்தி மூன்று கண்கள் உடையவராகவும் பூணூல் அணிந்தவராகவும், கையில் கமண்டலம், திருவோடு கரண்டி ஆகியவற்றுடன் காட்சி தருகிறார்.

தொகுப்பு: ஜி.ராகவேந்திரன்

The post ஆன்மிகம் பிட்ஸ்: உச்சிப்பிள்ளையாரும் கற்பக விநாயகரும் appeared first on Dinakaran.

Tags : Dhil Aagayat ,Vijayagha ,
× RELATED திருக்குறுங்குடி அழகிய நம்பி ராயர் பெருமாள் ஆலயம்